உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின்
சர்வதேச யாப்பு விதி
1 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை தனது நிர்வாகத்தை சர்வதேச அடிப்படையில் வியாபித்து நிர்வகித்துக் கொள்வதற்காகத் தயாரித்துக்கொள்ளும் இவ்விதிநடைமுறைகள் “உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையின் யாப்பு விதி” என இத்தால் உருவாக்கம் பெறுகின்றது.
1.1 - இந்த அமைப்பு “உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை - International Tamil Art And Cultural Council (ITAACC)" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
2 - நோக்கம்
2.1 - உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், பண்பாடுகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தல்.
2.2 - தமிழர்களின் இயல், இசை, நாடகக் கலைகளையும் பாரம்பரியக் கலைகளையும் பேணிப்பாதுகாத்து அவற்றைச் செழுமைப்படுத்தல்.
2.3 - தமிழ் மொழி, தமிழர் கலை, பண்பாடு, தமிழர்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் பற்றிய பொருளில் சர்வதேச கருத்தரங்குகளை நடத்துதல்.
2.4 - தமிழ் ஆய்வுகளை வெளியிடுதல், அரிய நூல்களை பிரசுரம் செய்தல், புதியஎழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம் செய்தல்.
2.5 - தமிழர் தம் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்தல்.
2.6 - இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் மகத்துவத்தையும் போதிக்கும் வசதிகளை ஏற்படுத்தல்.
2.7 - தமிழ் எழுத்தாளர்கள், தமிழர் வரலாறு பற்றிய ஆய்வாளர்கள் மற்றும் கலைஞர்களைக் மரியாதை செய்து ஊக்குவித்து ஆதரவு நல்குதலும். அத்துடன் குறித்த இந்தப்பணியில் ஈடுபடும் நலிவுற்ற அத்தகையோருக்கு உதவுதலும்.
2.8 - தமிழின் இனிய சங்கப்பாடல்களிலிருந்து நவீன கலைஞர்களின் கவிதைகள் வரை அவற்றிற்கு இசை வடிவம் கொடுத்தல், அவற்றை இசைப் பேழைகளாக வெளியிடல்.
2.9 - தமிழர்களின் பாரம்பரியக் கலைகளின் ஊடாக உலகளாவிய தமிழர்களிடையே பரஸ்பரம், புரிந்துணர்வு, கூட்டுறவு போன்றவற்றை ஏற்படுத்துதல்.
3 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் தலைமையகமும் கிளைகளும்.
3.1 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் தலைமையகம் பிரித்தானியா நாட்டில் செயற்படும். இது உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவை என்று அழைக்கப்படும்.
3.2 - இந்தத் தலைமையகம் அதனது கிளைகளைச் சர்வதேச மட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் உருவாக்கும். அவ்வாறு உருவாக்கப்படும் அந்தக் கிளைகள் குறித்த நாடுகளின் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும்.
4 - தலைமைத்துவம்.
4.1 - இந்த அமைப்பை உருவாக்கிய நிறுவனர் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவைக்கு ஆயுட்காலத் தலைவராக செயற்படுவார். இந்த அமைப்பின் சர்வதேசத் தலைவரால் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவைக்கு அவர் உட்பட ஒன்பது பேரைக் கொண்ட ஒரு சபை உருவாக்கப்படும். இந்தச் சபையே ‘’உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவை” என்று அழைக்கப்படும்.
4.2 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிளைகள்.
4.2.1 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையானது உலகில் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் அதன் கிளைகளான தேசியப் பேரவைகளை அமைக்கும். இந்த தேசியப் பேரவைகள் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் நோக்கத்தை செயற்படுவதற்காக அந்தந்த நாடுகளில் இலக்காகக் கொண்டு இந்த அமைப்பின் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களைத் தேர்ந்தெடுத்து உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுத் தேசியப் பேரவைக்கான நிர்வாகசபை ஒன்றை உருவாக்கித் தமது நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கும். இந்த நிர்வாகசபை ஆயுட்காலம் ஆகக் கூடியது நான்கு வருடங்களாக இருக்கும். அதற்குப் பின்னர் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய வேண்டும்.
4.2.2 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுச் சர்வதேசப் பேரவையானது ஒவ்வொரு நாட்டிலும் தேசியப் பேரவைகளை அமைக்கும் போது அந்தந்த நாட்டின் பூகோள அமைப்பு, தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தேவை ஏற்படும் பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அவ்வாறான கிளைகளையும் ஏற்படுத்தலாம். அவ்வாறான கிளைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நிர்வாக சபைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பல கிளைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அந்த நாட்டின் நிர்வாக சபைகள் பரஸ்பரம் கலந்தாலோசித்துச் சமரச அடிப்படையில் எல்லைகளைத் தாங்களே வரையறை செய்து கொள்ள வேண்டும்.
எல்லை நீர்ணயம் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் சர்வதேசப் பேரவையின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இந்த விடயம் தொடர்பாக ஒரு நாட்டின் தேசியப் பேரவையானது அந்நாட்டின் இடப்பரப்பு, மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவற்றிற்கு ஏற்ப நிர்வாகத்தை அந்த நாட்டில் இருக்கும் குறித்த தேசியப் பேரவையினால் நிறைவேற்ற முடியாது என்று அந்த நிர்வாக சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே அவ்வாறான மேலதிகக் கிளையைச் சர்வதேசப் பேரவையால் நிறுவ முடியும். அவ்வாறு குறித்த ஒப்புதல் தீர்மானம் எடுக்கப்பட்டு தேசியப் பேரவையினால் எழுத்து மூலம் சர்வதேசப் பேரவைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
5 - உறுப்புரிமை
5.1 உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச மற்றும் தேசியப் பேரவைகளில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த அமைப்பின் உறுப்புரிமை விண்ணப்பப் படிவம் ITAACC-I எனும் படிவத்தில் உறுப்புரிமைக்காக விண்ணப்பித்து, நீர்வாக சபையினால் தீர்மானிக்கப்படும் சந்தாப் பணத்தைச் செலுத்தி அமைப்பின் யாப்பு விதிகளுக்குகேற்ப ITAACC-3 எனும் படிவத்தில் சத்தியம் அல்லது உறுதியுரை ஒன்றைச் செய்து கொள்வதன் மூலம் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் உறுப்புரிமையைப் பெறமுடியும். பதினெட்டு வாதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் இந்த அமைப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
6. அமைப்பின் உறுப்புரிமை இழக்கப்படும் சந்தர்ப்பங்கள்
6.1 - உறுப்பினர் ஒருவர் மரணம் எய்தும் சந்தர்ப்பம்.
6.2 - யாப்பு விதி மற்றும் நிலையியற் கட்டளைகளின் வேண்டுகைகளுக்கு எதிராக செயற்பட்டமை உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பம்.
6.3 - தானாக முன்வந்து உறுப்புரிமையை இழக்க விரும்புவதாக எழுத்து மூலம் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம்.
6.4 - முன்னறிவித்தலின்றித் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கு பற்றாமை.
6.5 - அமைப்பின் நோக்கத்திற்கு எதிராக அல்லது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார் என்பதை உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பம்.
7 - அமைப்புச் சார்ந்த கட்டுப்பாட்டு வரையறைகள்.
7.1 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை, அரசியல் மற்றும் எந்தவொரு கட்சிசார் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த வகையில் யாராவது தங்கள் அரசியலை வளர்ப்பதற்கோ அல்லது அரசியல் செல்வாக்கை விருத்திசெய்வதற்கோ இவ் அமைப்பைக் களமாகப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு யாராவது ஒருவர் செயற்பட முனைவது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குறித்த உறுப்பினர் இவ் அமைப்பிலிருந்து அகற்றப்படுவர். அத்துடன் சாதிப் பாகுபாடு, மதப் பாகுபாடு, சமூக அந்தஸ்து மற்றும் பிரதேச வேறுபாடு என்பவை இவ் அமைப்பில் செல்வாக்குச் செலுத்த முடியாது. மேற்படிப் பகுப்புக்களைக் களைந்து ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் கண்ணியத்தோடு கௌரவம் மிக்க மனிதர்களாக ஒரே பார்வையில் அனைவரும் மதிக்கப்படுவர்.
7.2 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளும் அனைவரும் சர்வதேச மற்றும் தேசியப் பேரவைகளின் யாப்பு விதிகளுக்கும் அத்துடன் காலப்போக்கில் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள், நிலையியற் கட்டளைகள் என்பவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
7.3 - சர்வதேசப் பேரவை மற்றும் தேசியப் பேரவை ஆகிய இரண்டு அவைகளினாலும் காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள், நிலையியற் கட்டளைகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படின், அவ்வாறு முரண்பாட்டைக் கண்டறிந்தவர், அல்லது குறித்த முரண்பாடுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர் அல்லது அவற்றால் பாதிப்படைவதாகக் கருதும் உறுப்பினர் ஒருவர், அவ்வாறான முரண்பாட்டின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்தந்த நாட்டின் தேசியப் பேரவைத் தலைவருக்கு அது தொடர்பான எழுத்து மூலமாக விண்ணப்பம் ஒன்றைச் செய்து, குறித்த முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு குறித்த முரண்பாட்டைத் தேசியப் பேரவை தீர்க்க முடியாத சந்தர்பங்களில், அந்த நாட்டுப் பேரவையின் தலைவர், அதனைச் சர்வதேசப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவந்து, அவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு கொள்ளலாம்.
7.4 ஒவ்வொரு நாட்டின் தேசியப் பேரவையுடன் தொடர்பான எந்த ஒரு தனிநபரும் தாங்கள் வாழும் நாட்டின் சட்டம், தேசியம், இறையாண்மை என்பவற்றை மதித்து அவற்றுக்கு எந்தவகையிலும் பங்கம் ஏற்படாத வகையில் நடந்து பேரவையின் நற்பெயரைப் பாதுகாக்கும் பொருட்டு செயற்படவேண்டும்.
7.5 உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவை மற்றும் நாடுகளில் உள்ள தேசியப் பேரவைகளின் சாதாரண உறுப்பினர்கள் என்போர் தவிர்ந்த ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் தமிழர்கள் தொடர்பான மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் எமது அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஒப்பான வேறு எந்த ஓர் அமைப்பிலும் அங்கத்துவம் பெற முடியாது. ஏற்கனவே வேறோர் அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்தல் முடியாது.
7.6 உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையால் ஒவ்வொரு நாட்டிலும் உத்தியோகபூர்வமாக அமைக்கப்படும் தேசியப் பேரவை வேறு எந்த உப கிளையையும் நிறுவ முடியாது. உத்தியோகபூர்வமாக அமைக்கப்படும் கிளைகள், தங்கள் பேரவையின் நிர்வாகத்தை இலகுபடுத்துவதற்குத் தேவைப்படும் நீர்வாக அலகுகளை மட்டும் அவ்வாறு நிறுவ முடியும். அவ்வாறு நிறுவப்படும் நிர்வாக அலகுகளின் தேவை பற்றிய தெளிவான விபரத்தை அந்தந்த நாட்டின் தேசியப் பேரவையானது அவ்வப்போது சர்வதேசப் பேரவைக்கு உரியவாறு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் நிர்வாக அலகுகள் அமைப்பின் நிர்வாகத்தை இலகுபடுத்தும் முகமாகவே மட்டும் இருக்க முடியும். அது அந்தந்த நாட்டின் கலை, மற்றும் பண்பாடு என்பவற்றின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்.
8 - பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை: -
8.1 - அமைப்புச் சார்ந்த தொடர்பாடல்கள் வெளியீடுகள், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வொரு உறுப்பினரது பெயரையும் அவர்களின் தொடர்பு சாதனங்களின் விபரங்களையும் சர்வதேசப் பேரவை பயன்படுத்துவதற்கு உறுப்பினர்கள் தங்களின் ஒப்புதல்களை வழங்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் வழங்கப்படும் உறுப்பினர்களின் விபரங்களைக் கண்ணியமான முறையில் சர்வதேசப் பேரவை கையாளும்.
8.2 - எவராவது உறுப்பினர் ஒருவர் அமைப்பை வீட்டு அகலும் போது அல்லது அகற்றப்படும் போது அவர்களது மேற்படி விபரங்களை அமைப்புச் சார்ந்த அனைத்துத் தொடர்பாடல்களிலுமிருந்து சர்வதேசப் பேரவையானது அகற்றிவிடும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8.3 - பேரவையிலிருந்து விலகிய பின்பு பேரவை சார்ந்த உறுப்பினர்களுடன் பேரவை சார்ந்த எந்தத் தொடர்பினையும் மேற்கொள்ள முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
9 - ஆலோசனைச் சபை
9.1 - அமைப்பின் சர்வதேசப் பேரவையானது அதன் தலைவர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் சபை ஒன்றை உருவாக்கலாம். தலைவர் அதற்காக உலகின் எந்த நாட்டிலிருந்தும் இந்த ஆலோசனைச் சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதுவே அமைப்பின் "சர்வதேசப் பேரவைக்கான ஆலோசனைச் சபை" என்று அழைக்கப்படும்.
9.2 - ஒவ்வொரு நாட்டிலுள்ள தேசியப் பேரவையும் அதன் நிர்வாக சபைக்கு அவ்வப்போது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, மக்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்ற கல்விமான்கள், பல்துறை விற்பனர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையை அமைத்துக் கொள்ளலாம். அந்தச் சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை அந்தப் பேரவையே தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அமைத்துக் கொள்ளும் ஆலோசனைச் சபையில் சேர்த்துக்கொள்ளப்படும் உறுப்பினர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட சட்டவல்லுநராக இருப்பது சிறந்தது.
9.3 - ஆலோசனைச் சபைக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் போது பெரும்பான்மையுடனான தீர்மானம் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக ஒற்றை எண்ணைக் கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையில் கவனம் செலுத்துதல் முக்கியமானதாகும்.
10 - செயற்பாடுகள்
10.1 - சர்வதேசப் பேரவையின் செயற்பாடுகள்.
10.1.1 - சர்வதேசப் பேரவையானது தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் மற்றும் தமிழர்களின் வரலாறு என்பவற்றைப் பிரதிபலிக்கும் பொருட்டு சர்வதேச மட்டத்தில் கிளைகளை அமைத்தல்.
10.1.2 - அவ்வாறு அமைக்கப்படும் கிளைகளின் நிர்வாகச் செயற்பாடுகளை அவதானித்து, தேவையேற்படும் போது தலையீடு செய்து அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குதல். அத்துடன் அமைப்பு சம்பந்தப்பட்ட சட்டச்சிக்கல் முரண்பாடுகள் ஏற்படின் அதற்குத் தீர்வு காணுதல்.
10.1.3 - ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தமிழ்க்கலைஞர்களையும் அந்த நாட்டிலுள்ள தேசியப் பேரவையின் ஊடாக சர்வதேச மட்டத்தில் கலைகள், மொழி என்பன தொடர்பில் ஒன்றிணைத்தல்.
10.1.4 - வருடந்தோறும் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் சர்வதேச மட்டத்தில் மாநாடுகளை சுற்றொழுங்கில் நடாத்துதல்.
10.2 - தேசியப் பேரவையின் செயற்பாடுகள்
10.2.1 - ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தேசியப் பேரவையானது அந்த நாட்டில் முடிந்தளவு தமிழ் பேசும் அனைவரையும் உலகத் தமிழர் பண்பாட்டுப் பேரவையில் உறுப்பினராக இணைத்துக் கொள்வதன் மூலம், அவர்களை “தாம் ஒவ்வொருவரும் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினர்கள்” எனும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துதல்.
10.2.2 - தேசியப் பேரவைகள் தமது நிர்வாகத்தை இலகுபடுத்துவதற்காக நிர்வாக அலகுகளை ஏற்படுத்த வேண்டியேற்படின் அந்த நாட்டின் பிரதேசங்களை நிர்வாக அலகுகளாக வகுத்து அவற்றுக்கான இணைப்பாளர்களை நியமித்து கண்காணித்து மேற்பார்வை செய்தல்.
10.2.3 - தமிழர்களின் கலை, மொழி மற்றும் வரலாறு பற்றிய விடயங்களில் ஈடுபாடு கொண்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தல்.
10.2.4 - சர்வதேச மாநாடு நடாத்துவதற்குத் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் சர்வதேசப் பேரவையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல். சர்வதேசப் பேரவையின் ஒப்புதலுடன் அதற்கான திகதியை நிர்ணயித்து சர்வதேச மாநாட்டை நடாத்துதல்.
11 - ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தேசியப் பேரவையின் நிர்வாக, நிதிச் செயற்பாடுகள்
11.1 - சர்வதேசப் பேரவையால் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள தேசியப் பேரவைக்கு முதன் முதலில் நியமிக்கப்படும் தலைவர் தமது கிளைக்குரிய நிர்வாக சபை ஒன்றைத் தெரிவு செய்து, அதன் விபரத்தை சர்வதேச பேரவைக்கு அறிக்கையிட வேண்டும்.
11.2 - முதலாவது நிர்வாகசபையின் காலம் முடிவடைந்ததும், இரண்டாவதாக வரவுள்ள நிர்வாகசபையை நேர்முந்திய நிர்வாக சபையே தெரிவு செய்யும். அதன் விபரத்தைப் புதிய நிர்வாகசபை தெரிவாகிப் பதினைந்து நாட்களுக்குள் சர்வதேசப் பேரவைக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் தேசியப் பேரவைக்குச் சொந்தமான அனைத்து ஆவணங்கள், சொத்துக்கள் என்பனவற்றை முறையாகப் புதிய நிர்வாக சபையிடம் கையளிக்கப்பட வேண்டும்.
11.3 - ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள தேசியப் பேரவையின் செயற்பாடுகள் பற்றிக் காலத்துக்குக் காலம், பருவகால அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சர்வதேசப் பேரவைக்கு உரிய காலத்திற்குள் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
அதன் படி
• முதலாம் காலாண்டு அறிக்கை சித்திரை மாதம் 30ஆம் திகதிக்கு முன்பதாகவும்
• இரண்டாம் காலாண்டு அறிக்கை ஆடி மாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாகவும்
• மூன்றாம் காலாண்டு அறிக்கை புரட்டாதி மாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாகவும்
• நான்காம் காலாண்டு அறிக்கை அடுத்துவரும் வருடம் தைமாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாகவும்.
• வருட இறுதி அறிக்கை மாசிமாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாகவும் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
11.4 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையானது சர்வதேச அளவிலான கிளைகளின் நிர்வாகத்தின் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை வகுத்து அதற்கு ஏற்ற பொறிமுறைகளை ஏற்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துதல்.
11.5 - அமைப்பின் நிர்வாகத்தை சர்வதேசரீதியாக ஒரு கட்டுப்பாடான ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகளில் செயற்படும் தேசியப் பேரவைகளின் நீர்வாகத்திற்குத் தேவையான படிவங்கள், விண்ணப்பப் படிவங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை சர்வதேசப் பேரவையே வடிவமைக்கும். அதற்கான படிவங்களைக் கிளைகள் தீர்மானிக்க முடியாது. கிளைகளுக்கு அவ்வாறான படிவங்கள் தேவைப்படின் அதற்கான மாதிரியை சர்வதேசப் பேரவையிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்.
11.6 - நாடுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிளையின் அல்லது கிளைகளின் செயற்பாடுகள் பற்றிய பருவகால அறிக்கைகளைக் குறித்த கிளைகளிடமிருந்து பெற்று, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
11.7 - ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பேரவையின் உறுப்பினர்களுக்கு அமைப்புச் சார்ந்த செயற்பாடுகளின் நிமித்தம் ஏதேனும் பிரச்சினைகள், வெளிவாரியான தாக்கங்கள் ஏற்பட்டு அதனால் அவர் பாதிப்படையும் சந்தர்ப்பங்கள் எதுவும் ஏற்படின், சர்வதேச பேரவைகள் தலையிட்டு குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும்.
11.8 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் அந்தந்த நாடுகளின் நிதி நிர்வாகச் செயற்பாடுள் முதலியவற்றைக் கண்காணித்து ஆலோசனை வழங்கி, கட்டுப்படுத்துதல்.
11.9 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரையின் கிளை நாடுகளில் செயற்படும் தேசியப் பேரவைகளும் தங்கள் நாடுகளில் செயற்படும் நிதி செயற்பாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் வங்கிக் கணக்கொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
11.10 - குறித்த நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசியப் பேரவைகள் அந்தந்த நாட்டின் நிர்வாகசபை உறுப்பினர்கள் தலைவர்/ செயலாளர்/ பொருளாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் செயற்படக்கூடியவாறு இந்த வங்கிக் கணக்கு இயங்க வேண்டும்.
11.11 - நிதிச் செயற்பாட்டைத் திறம்பட நிர்வகித்துக் கொள்வதற்கான பிரதான காசேடு ( Cash Book) உட்பட ஏனைய உப பதிவேடுகளை ஒழுங்கான முறையில் பேண வேண்டும்.
11.12 - அந்தந்த நாடுகளின் உறுப்பினர்களிடமிருந்து அறவிடுவதற்கான சந்தாப்பணத்தின் தொகையை அந்தந்த நாட்டில் இயங்கும் தேசியப் பேரவையின் நீர்வாகசபையே தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும்.
11.13 - அவ்வாறு சேகரிக்கப்படும் சந்தாப்பணம் உட்பட ஏனைய அன்பளிப்புக்கள் போன்ற அனைத்தும் நிதிச் சேகரிப்புக்களும் அதே போல் செலவு விடயங்களும் காசுப்புத்தகத்தில் பதியப்படல் வேண்டும்
11.14 - ஒவ்வொரு நாடுகளிலும் செயற்படும் தேசியப் பேரவையின் செயற்பாடுகள் பற்றி சர்வதேசப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படும் பருவகால அறிக்கையில் இந் நிதிச் செயற்பாடுகளும் இணைக்கப்படல் வேண்டும்.
11.15 - ஒவ்வொரு கிளை நாடுகளும் தங்கள் நாடுகளில் செயற்படும் தேசியப் பேரவையின் நிதி நிர்வாகச் செயற்பாடுகளை ஆய்வு செய்வதற்கு கணக்காய்வு (Audit) வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் கணக்காய்வுக் குழு யாருடைய தலையீடுகளோ அல்லது அழுத்தங்களோ இல்லாமல் சுதந்திரமாகக் கணக்காய்வை மேற்கொள்வதற்கான வசதிகளை அந்தந்த நாடுகளின் நிர்வாகசபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களால் தயாரிக்கப்படும் கணக்காய்வு அறிக்கை மேற்படி பந்தி 11.3 இல் கூறப்பட்ட அறிக்கையோடு இணைக்கப்படல் வேண்டும்.
11.16 - ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தேசியப் பேரவையால் ஆண்டறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும். குறித்த ஆண்டறிக்கை கணக்காய்வுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு சர்வதேசப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
12 - சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
12.1 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒவ்வொரு நாட்டின் தேசியப் பேரவையின் செயற்பாடுகளையும் சர்வதேசப் பேரவையுடன் இணைக்கும் முகமாக சர்வதேசப் பேரவைக்கு ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு நாட்டின் தேசியப் பேரவையிலிருந்து தெரிவு செய்யப்படுவார். இவரை உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையே நியமிக்கும்.
12.2 - வெவ்வேறு நாடுகளில் முதன்முதலாக உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிளைகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகசபை செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது அந்த நிர்வாகசபையின் தலைவரே அடுத்து வரும் நிர்வாகசபை தெரிவாகும் வரைக்கும் அந்த நாட்டின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுவார்.
12.3 - ஒவ்வொரு நாட்டின் தேசியப் பேரவைக்கும் அந்தந்த நாடுகளின் தேசியப் பேரவையால் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்படும் தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்பு நேர்முந்திய தேசியப் பேரவையின் தலைவர் மீண்டும் சர்வதேச ஒருங்கிணைப்பளராக மீண்டும் மரபுரீதியாக நியமனம் பெறுவார்.
12.4 - உறுப்புரை 12.3 இன்படி நிர்வாசபைத் தலைவர் இயல்பாகவே சர்வதேச இணைப்பாளராகத் தெரிவாகிய பின்னர், ஏற்கனவே இருந்த சர்வதேச இணைப்பாளர் அந்த நாட்டின் ஆலோசனைச் சபையில் இடம் பெறுவார்.
12.5 - இதன் பொருட்டு ஏற்கெனவே இருந்த ஆலோசனைச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். இந்த யாப்பு விதி 12.3 இற்கு அமைவாக ஆலோசனைச் சபையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றை எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்குமான தேசியப் பேரவைக்கு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும் போது மேற்படி சுற்றொழுங்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
13 கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள்.
13.1 - ஒவ்வொரு நாட்டின் தேசியப் பேரவையும் அதன் நிர்வாகசபைக் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். தேவை ஏற்படின் விசேட நீர்வாகசபைக் கூட்டங்களையும் நடத்தலாம்.
13.2 - ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் நடைபெறுகின்ற நிர்வாக சபையின் செயற்திட்டங்கள் மற்றும் முன்னைய கால செயற்திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை ஆராயும் பொருட்டு காலாண்டுக்கு ஒருமுறை விசேடமான கூட்டமொன்று நடைபெற வேண்டும்.
13.3 - ஆண்டுக்கு ஒரு தடவை ஒன்றுகூடல் விழா ஒன்றை நடாத்தி உறுப்பினர்களையும், உறுப்பினரின் குடும்பத்தாரையும் நண்பர்களையும் உள்ளுர்க் கலைஞர்களையும், சமூகத்தவர்களையும் வரவழைத்து ஆண்டு நினைவு விழாவைக் கொண்டாட வேண்டும்.
13.4 - சர்வதேசப் பேரவையால் தேதி குறிப்பிடப்பட்டு சர்வதேச மட்டத்திலான மாநாடு நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் சர்வதேச மாநாட்டைத் திறம்பட நன்கு திட்டமிட்டு சர்வதேசப் பேரவையின் ஆலோசனையும் பெற்று சர்வதேச மாநாட்டை நடாத்த வேண்டும்.
14 - உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவை இந்த யாப்பில் காலத்தின் தேவைக்கேற்பத் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டியிருப்பின் சர்வதேசப் பேரவையின் பெரும்பான்மை ஒப்புதலுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.
15 உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசப் பேரவையின் யாப்பு விதியின் உறுப்புரை 7.2க்கு அமைவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசியப் பேரவைக்கு உருவாக்கப்பட்டுள்ள யாப்பு விதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியிருப்பின், அந்த நாட்டின் தேசியப் பேரவையின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று மாற்றங்கள் மேற்கொள்ளலாம்.
முக்கியமானவை
முகப்பு
வரையறை
எங்களைப்பற்றி
படங்கள்
நிகழ்வுகள்
தொடர்பு
கிளைகள்
பிரித்தானியா
இலங்கை
இந்தியா
கனடா
மலேசியா
சுவிஸ்
பின்தொடர
[custom-facebook-feed feed=2]
Duis aute irure dolor in repreh enderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occae cat cupidatat non proident.